அணை வறண்டு வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது குறைப்பு; உறை கிணறு மூலம் குடிநீர் வழங்குவதில் சிக்கல்: கோடை காலம் வரை தாங்குமா என சந்தேகம்

விகேபுரம்: பாபநாசம் அணை வறண்டு வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதால், உறை கிணறு மூலம் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைவாக ஆற்றில் செல்லும் தண்ணீரை மணல் மூடைகளை அடுக்கி திருப்பும் அவல நிலை தற்போதே ஏற்பட்டுள்ளது. எனவே, கோடைகாலம் வரை தாங்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பாபநாசம் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை நம்பி தான் இந்த அணை உள்ளது. ஆனால் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில் தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளது. தற்போதே வெயில் கொளுத்தி வருவதால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் 27.9 அடியாக  குறைந்துள்ளது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து வரும் மே மாதம் வரை குடிநீர் தேவையை  பூர்த்தி செய்வது என்பது சவாலான காரியமாக உள்ளது. இந்த சூழலில் தற்போதே தாமிரபரணி ஆற்றில் குடிநீருக்காக விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் ஆற்றில் இருந்து சிவந்திபுரம், அடையக்கருங்குளம் ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உறை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தாமிரபரணியாற்றில் தண்ணீர் அளவு வெகுவாக குறைக்கப்பட்டதால் உறை கிணற்றிற்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் குறைவாக ஆற்றில் செல்லும் தண்ணீரை அடையக் கருங்குளம் ஊராட்சி பணியாளர்கள் ஆற்றில் மணல் மூடைகளை அடுக்கி உறை கிணறு பக்கம் தண்ணீரை திருப்பி உள்ளனர். இதன் மூலம் ஊராட்சியிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்த கூட்டு குடிநீர் திட்டமானது தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை எடுத்து பொதுமக்களுக்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் தண்ணீர் எடுத்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கோடை காலம் வரை தாங்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை கோடை காலத்தில் பெய்யும் மழை கருணை காட்டும் பட்சத்தில் ஓரளவு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

குடிநீரை சுத்திகரிப்பு செய்து வழங்க நடவடிக்கை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால் அவற்றை மணல் மூடைகள் கொண்டு உறை கிணறுக்கு திருப்பி அனுப்பபடுகிறது. இந்த தண்ணீரை அடையக்கருங்குளம், சிவந்திபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு நேரடியாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு மாறாக, தற்போது வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: