சமூகத்தின் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களால் சிறந்த மனிதராக விளங்க முடியும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேச்சு

சென்னை: சமூகத்தின் அனைத்து துறைகளிலும், விளையாட்டு வீரர்களால் சிறந்த மனிதராக விளங்க முடியும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை, இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாடு இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல்கலை துணைவேந்தர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2019-2020, 2020-2021, 2021-2022 ஆகிய கல்வி ஆண்டில் பயின்ற மொத்தம் 7,754 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவர்களில் 165 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார். இந்த 165 பட்டதாரிகளை தவிர மற்றவர்களுக்கு தபால் மூலமாக பட்டம் அனுப்பி வைக்கப்படும். இன்று பட்டம் பெறும் 165 மாணவர்களில் 58 பேர் பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க், 107 பேர் ஆராய்ச்சியில் பட்டம் பெற்றவர்கள். ஒன்றிய அமைச்சர் அமைச்சர் அனுராக்சிங் தாகூர் பேசியதாவது:  விளையாட்டு வீரர்களால் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்த மனிதராக விளங்க முடியும். விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் சமூக ஒழுக்கத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.

தமிழகம் மிகச்சிறந்த கலாசார மையமாக விளங்குகிறது. பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் மிகவும் ஈர்ப்புடையது. செஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், இந்தியாவில் விளையாட்டிற்காக உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம். விளையாட்டு துறையில், அறிவியல் தேவைகளும் அதிகம் உள்ளது. தடகள வீரர்களுக்கு அறிவியல் சார்ந்த படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா போட்டிகளில் பங்குபெறும், பெண் குழந்தைகள் தேசிய சாதனைகளை முறியடித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

Related Stories: