ஆம்பூர் அருகே வாகன சோதனையில் மான் கறியுடன் சுற்றிய 2 பேர் கைது: 10 கிலோ கறி பறிமுதல்

ஆம்பூர்: ஆம்பூர் போக்குவரத்து போலீசார் ஓஏஆர் சிக்னல் அருகே வாகன சோதனையில் நேற்று  ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த கூறினர். ஆனால், போலீசாரை கண்டதும் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர். உடன் போலீசார் விரட்டி சென்று அந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட இருவரையும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். பின்னர், இருவரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் கொண்டு வந்த சாக்கு பையில் மான்கறி எடுத்து வந்ததும் தெரியவந்தது.

 உடன் இருவரையும் மான்கறி மற்றும் பைக்குடன் போலீசார் ஆம்பூர் வன சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், அவர்களிடம் ஆம்பூர் வன சரக அலுவலகத்தில் வன சரகர் சங்கரய்யா தலைமையிலான வனதுறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ராமகொண்ட ஹள்ளியை சேர்ந்த ஜெயபால் (51), தர்மபுரி அடுத்த ராஜாதோப்பை சேர்ந்த சிவா(39) என்பதும், இருவரும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு அருகே இயங்கி வரும் ஒரு கல் குவாரியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் ஒன்று இறந்து கிடந்ததாகவும், அந்த மானின் கறியை தாங்கள் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

 உடனே வனத்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 10 கிலோ மான்கறி, இரு சக்கரவாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: