கெடார் அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு-ஒரு வருடத்துக்கு பிறகு கிருஷ்ணகிரி சகோதரர்கள் கைது

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே சாலையோர டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருடிய கிருஷ்ணகிரி சகோதரர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கெடார் அடுத்த சூரப்பட்டு பெட்ரோல் பங்க் அருகில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி நள்ளிரவு அப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி அதிலிருந்த சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 120 கிலோ எடையுள்ள காப்பர் கம்பிகளை லாவகமாக கழற்றி மர்ம நபர்கள் திருடி சென்றனர். மறுநாள் காலை அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கெடார் போலீசார், டிரான்ஸ்பார்மரை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பூத்தமேடு பிரிவு உதவி மின் பொறியாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் துப்பு கிடைக்காத நிலையில் கடந்த சில வாரங்களாக செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சம்பவம் நடந்த நாளில் அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் டவர் மூலம் குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சக்திவேல் (23) மற்றும் அவரது சகோதரர் திருப்பதி (22) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து போலீசார் இருவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் திருவண்ணாமலையிலிருந்து தங்களுக்கு சொந்தமான மினிவேனில் விழுப்புரம் நோக்கி சென்ற போது திருடியதாகவும், அதனை விற்பனை செய்து அந்த பணத்தை செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து திருட்டிற்கு பயன்படுத்திய மினிவேனை போலீசார் பறிமுதல் செய்து அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்து வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: