கடலூர் உழவர் சந்தையில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை-வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்

கடலூர் : கடலூர் உழவர் சந்தையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூரில் கடந்த 2001ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை மூலம், கடலூரை சுற்றியுள்ள எம்.புதூர், எஸ்.புதூர், காராமணிக்குப்பம், வழிசோதனை பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்து பயன் பெற்று வருகின்றனர். பின்னர் நாட்கள் செல்ல செல்ல உழவர் சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்ததால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.92 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இங்கு தற்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தையின் வெளியிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு அங்கும் காய்கறிகள், கீரை பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் உழவர் சந்தை முழுவதும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேரத்திலும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த உழவர் சந்தைக்கு தினமும் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை உழவர் சந்தைக்கு வெளியே விட்டு செல்கின்றனர்.

இதனால் அந்த பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு வரும் திருடர்கள் சிலர் இருசக்கர வாகனங்களை திருடி சென்று விடுகின்றனர். இதை கண்காணிப்பதற்காக உழவர் சந்தையை சுற்றிலும் வெளியிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: