துருக்கி ஆப்பிள் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி: சென்னை பல் டாக்டர் கைது

சென்னை: துருக்கியில் இருந்து ஆப்பிள் வாங்கி தருவதாக கோவை தொழிலதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி செய்த சென்னை பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் (33) என்பவர் அறிமுகமானார். அப்போது அரவிந்த், துருக்கியில் இருந்து குறைந்த விலைக்கு கன்டெய்னர் மூலமாக ஆப்பிள் வாங்கி தருவதாக ரமேஷிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரமேஷ் தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் வாங்கி வியாபாரம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, அவர் பல தவணைகளாக அரவிந்த் வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ.1.24 கோடி செலுத்தியுள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட அரவிந்த், ஆப்பிள் அனுப்பவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோதும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த மோசடிக்கு பல் டாக்டர் அரவிந்த்தின் மனைவி துர்கா பிரியாவும் உடந்தையாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட ரமேஷ், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பல் டாக்டர் அரவிந்த்தை கைது செய்தனர். அவரது மனைவி துர்கா பிரியா மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட பல் டாக்டர், மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, சினிமா படம் எடுக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: