கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க இம்ரானுக்கு நீதிபதி யோசனை

இஸ்லாமாபாத்: நீதிமன்றத்தில் சரணடைந்தால் கைது நடவடிக்கையில் இருந்து  தடுக்க முடியும் என இம்ரான் கானுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் அவற்றை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே போல் பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கிலும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் அவரை கைது செய்ய போலீசார் அவர் வீட்டுக்கு சென்ற போது தெஹ்ரீக் இன்சாப் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.  இதனால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் 60 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக இம்ரான் கட்சியினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் கைது நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட உத்தரவிட்டது. இந்நிலையில், கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பரிசு பொருள்கள் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஸபர் இக்பால்,‘‘இந்த வழக்கில் இம்ரான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர் ஏன் நீதிமன்றத்துக்கு வரவில்லை. அதற்கான காரணம் என்ன? சட்டப்படி போலீசாருக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கக்கூடாது. அவர் நீதிமன்றத்தில் ஆஜரானால்  அவரை போலீசார் கைது செய்வதில் இருந்து  என்னால் தடுக்க முடியும்’’ என்றார். நாளை நீதிமன்றத்தில் ஆஜராக இம்ரானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: