திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானைக்கு தோல் நோய் பாதிப்பு; பக்தர்கள் தரும் உணவுகள் இனி பாகன்கள் மூலம் வழங்கப்படும்: மருத்துவர்கள் குழு ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானைக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் தரும் உணவுகள் இனி பாகன்கள் மூலம் வழங்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் அறிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றதாகும். சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கோயிலில் தெய்வானை என்ற 25 வயதான யானை வளர்க்கப்படுகிறது. தற்போது யானை தெய்வானை தோல் நோயால் பாதிப்படைந்துள்ளது. மரு மற்றும் பூஞ்சை போன்ற தோல் நோய் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் யானையின் உடலிலும், கால் நகங்களிலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கால்நடை மருத்துவர் குழுவினர் நேற்று கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் முன்னிலையில் யானையை பரிசோதனை செய்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை யானைக்கு கொடுக்கின்றனர். இவற்றில் சில உணவுகள் யானைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் யானையின் உணவுப் பழக்கம் இயற்கைக்கு எதிரானதாக மாறி விடுகிறது. எனவே இனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானை தெய்வானைக்கு கொடுக்க விரும்புவதை யானை பாகனிடம் கொடுக்குமாறு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு பக்தர்கள் கொடுப்பதில் இருந்து தேவையானவை மட்டும் யானைக்கு உணவாக வழங்கப்படும்.

யானைக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய் குணமாக அவற்றின் மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பிறகு மேற்கொண்டு சிகிச்சை நடைபெறும் என அருள்முருகன் தெரிவித்தார். யானைக்கு பரிசோதனை நடைபெற்ற போது அறங்காவலர் செந்தில் முருகன், கால்நடை மருத்துவர்கள் மதிவாணன் (மதுரை), வினோத்குமார் (திருச்செந்தூர்), பணி ஓய்வு பெற்ற தேனி கால்நடை உதவி இயக்குநர் உமாகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: