கனமழையால் ரெட் அலர்ட் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நாளை உருவாகிறது

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன் அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மே 31ம் தேதியில் கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கேற்ப தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் ஒன்றும் உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதுடன், வெப்பமும் குறைந்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், மதுரை, மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக நாமக்கல், காரைக்குடி, சேலம், திருச்சி, ஏற்காடு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக கமுதியில் 120 மிமீ, தல்லாகுளம் 110 மிமீ, புள்ளம்பாடி 100 மிமீ என பெய்துள்ளது. அதனால் தூத்துக்குடி, சேலம், மாவட்டங்்களில் இடி மின்னல் தாக்கி இரண்டு பேர் இறந்துள்ளனர். அத்துடன் 14 கால்நடைகளும் இறந்துள்ளன. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.

அது மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிக்கு சென்று 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக தேனி, விருதுநகர், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதே நிலை 5 நாட்களுக்கும் நீடிக்கும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  வெப்பநிலையை பொருத்தவரையில் 5 நாட்களுக்கு இயல்புநிலையை ஒட்டியே இருக்கும். மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசும்.

அதே போல குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரள கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 25ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மீட்பு நடவடிக்கைகளும் எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post கனமழையால் ரெட் அலர்ட் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நாளை உருவாகிறது appeared first on Dinakaran.

Related Stories: