ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிப்பதற்காக ரயில்வே அதிகாரி இடமாற்றம் ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை உத்தரவு

சென்னை: மத்திய தெற்கு ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய கவுரிதனயன் என்பவர் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது மகனை கவனிக்க வேண்டும் எனக் கூறி தெற்கு ரயில்வேவுக்கு இடமாற்றம் கோரினார். அதன்படி, இடமாற்றம் வழங்கப்பட்டு அரக்கோணத்தில் அவர் பணியில் நியமிக்கப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு முதல் அரக்கோணத்தில் பணியாற்றி வந்த அவரை இடமாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் தனது மகனை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஓய்வு பெறும் வரை அரக்கோணத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கோரி ரயில்வே நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை நிராகரித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை இடமாற்றம் செய்த உத்தரவையும், விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவையும் எதிர்த்து கவுரிதனயன் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் எஸ்.சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகளை கவனிக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பணியாளர் நலத்துறை அவ்வப்போதைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க வேண்டியுள்ளதால் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தற்போது பணியில் உள்ள பகுதியிலேயே நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உத்தரவிட்டார்.

The post ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிப்பதற்காக ரயில்வே அதிகாரி இடமாற்றம் ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: