மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காத வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் மின் வாரிய ஊழியர்கள்: இணைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத வீடுகளுக்கு மின் வாரிய ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து இணைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறிகள் மற்றும் வீடுகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மானியம் விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க கடந்த 4 மாதங்களாக மின் வாரியம் சிறப்பு முகாம்கள் நடத்தியது. ஆரம்பத்தில் ஆதார் எண்ணை இணைக்க பலர் தயக்கம் காட்டி வந்தனர்.

ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டதால் பலர் ஆதார் இணைக்க முன்வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஆதாரை இணைக்கும் கால அவகாசம் முடிந்தது என்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். 67 ஆயிரம் பேர் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். இவர்களது வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் இப்போது நேரில் சென்று இவர்களும் ஆதாரை இணைப்பதற்கு வசதியாக இணையதள சேவைகள் இன்னும் திறந்துள்ளது. கால அவகாசம் முடிந்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிலர் இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் ஆதாரை இணைக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம்.

சில பகுதிகளில் தாத்தா, அப்பா பெயரில் மின் இணைப்பு இருந்து அவர்கள் இறந்துவிட்ட  நிலையில் அவர்களின் வாரிசுகளுக்கு இடையே யாருடைய ஆதார் எண்ணை இணைப்பது என்ற பிரச்னை உள்ளதால் அந்த வீடுகளிலும் ஆதாரை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வீட்டு உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் ஆதார் எண்களை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் ஆதார் எண்களையும் இணைக்க வழிவகை உள்ளது. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே என்று எடுத்து சொல்லி வருகிறோம். ஆனாலும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதாரை இணைக்க அனுமதிப்பதில்லை. அதற்கு பதில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஆதாரை இணைத்து வைத்துள்ளனர்.

Related Stories: