ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜவினர் கைது: திமுகவினர் திரண்டதால் பரபரப்பு

ஆலந்தூர்: திமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி  நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் 29வது தெருவில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது,  திமுக ஆட்சியை பாஜவினர் கலைக்க முயன்றால் நடமாட முடியாது என பேசியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து நேற்று பிற்பகல் பாஜ இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வினோத்குமார் இன்பராஜ், மீனாட்சி முன்னிலையில் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிடப் போவதாகக் கூறி, தில்லை கங்கா நகரில் உள்ள ஒரு டீக்கடை அருகே பாஜவினர் வந்தனர். இதனையடுத்து திமுக மண்டலக் குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு பாஜவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் பாஜவினரை நோக்கி திமுகவினர் திரளாக சென்றனர். இதனால் அந்த பகுதி பதற்றமானது.

இதை தொடர்ந்து, அங்கு வந்த மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் மார்ட்டி டி. ரூபன், இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் திமுகவினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கோஷமிட்ட பாஜவினரை கைதுசெய்து ஆதம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: