ஊட்டியில் பனி குறைந்ததால் தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பாதுகாக்க வைத்திருந்த மிலார் செடிகள் அகற்றம்

ஊட்டி: ஊட்டியில் பனி குறைந்துள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பாதுகாக்க மூடிவைத்திருந்த மிலார் செடிகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்கட்சியும் நடத்தப்படுகிறது. இது தவிர கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சிகள் நடத்துவதற்காக தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், மலர் நாற்றுக்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மலர் நாற்றுகள் கோத்தகிரி மிலார் செடிள் கொண்டு அரண் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஊட்டியில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் காணப்படும்.

இதனால், தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. தற்போது, நாள்தோறும் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் இந்த தொட்டிகளில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: