நாகர்கோவில் : முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3000 சேர்த்து வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 765 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5 லட்சத்து 79 ஆயிரத்து 667 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 406 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் சேர்த்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 73 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 65 ஆயிரத்து 343 பயனாளிகள் மாதம்தோறும் பயனடைந்து வருகின்றனர்.
வழக்கம் போல் ஜனவரி மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்ட போது பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கியுள்ள ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட்டது.
ஜனவரி 8 முதல் ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.3000/- ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை அவர்களின் இல்லங்களுக்கே சென்று ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் ஏனைய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை நியாய விலைக்கடைகளில் நேரில் வந்து வாங்க இயலாத தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தற்போது ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவை அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 463 முதியோர் மற்றும் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கத்தொகை ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ளவர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும். இத்தகவலை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
