சிசோடியா கைதான போதுதான் படித்த பிரதமர் தேவை என்பதை உணர்ந்தேன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விளாசல்

போபால்: சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு தான் நமது நாட்டிற்கு படித்த பிரதமர் வேண்டும் என்பதை உணர்ந்தேன் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆம்ஆத்மி போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மபியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியாவை பிரதமர் மோடி சிறைக்கு அனுப்பிய நாளில் தான், கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, நாட்டில் படித்த பிரதமர் தேவை என்று நான் உணர்ந்தேன். கொரோனா தொற்று பரவிய போது ஒவ்வொரு வீடுகளிலும் தட்டுகளை வைத்து ஒலி எழுப்ப பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமர் குறைந்தபட்ச கல்வி அறிவுடன் இருந்தால், யாராவது அவரிடம் வந்து கொரோனா வைரசை விரட்ட மக்களை தட்டுகளை அடித்து ஒலி எழுப்புமாறு அறிவுறுத்த முடியுமா?.

ஆனால் நமது பிரதமர் மக்களை அதைச் செய்ய வைத்தார். அப்படி செய்ததால் கொரோனா வைரஸ் ஓடிவிட்டதா?. எனவே, பிரதமர் கல்வி கற்க வேண்டியது அவசியம். 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஊழல், பயங்கரவாதம்  ஒழிக்கப்படும் என்று பிரதமரை யாரோ ஒருவர் ஏமாற்றிவிட்டார். அதன்  பிறகு ஊழல் மற்றும் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா? ஒரு பிரதமருக்கு பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் அறிவு வேண்டும். டெல்லியில் அமைச்சர்களாக இருந்த சிசோடியா, ஜெயின் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லியில் கல்வி, சுகாதாரத்துறைகளை மாற்றி அமைத்தவர்கள். இந்த நடவடிக்கை தனியார் நிறுவனங்களின் நலன்களுக்கு எதிரானது என்பதால் பிரதமர் அதை விரும்பவில்லை. அவர்களை சிறையில் அடைத்துவிட்டார். ஆனால் பாஜவைச் சேர்ந்த ஊழல் அரசியல்வாதிகளை மோடி சிறையில் அடைக்க மாட்டார்.  

ஊழல் செய்பவர்கள் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கட்டுகிறார்களா? ஊழல்வாதிகள் தனியார்களின் நலனுக்காக அரசு பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அழிக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பிரதமர் மோடி பயப்படுகிறார். குஜராத்தில் நாங்கள் செயல்பட்ட விதம், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்த விதம் குகையில் இருக்கும் புலிக்கு சவால் விடுவது போல அமைந்து விட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சியை கண்டு மோடி பயப்படுகிறார். காங்கிரஸ் இப்போது மாற்றத்திற்கான கட்சி இல்லை. அந்த கட்சி இப்போது எம்எல்ஏக்களை விற்பனை செய்ய மட்டுமே பயன்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: