ஆவடியில் நகை பணம் கொள்ளை சம்பவத்தில் வாலிபர் இருவர் கைது: பைக் பறிமுதல்

ஆவடி: திருநின்றவூர், தென்றல் நகரை சேர்ந்தவர் மேதாஜி (52). மிட்டனமல்லி மின்சாரவாரிய கோட்ட பொறியாளர். இவர், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் திருமணத்திற்காக மைசூர் சென்றுள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டை இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைக்க முயன்றபோது சத்தம் கேட்டுள்ளது. உடனே, வீட்டின் அருகே வசிக்கும் மதுரவாயில் உதவி ஆய்வாளர் கோபால் எழுந்து வந்து வெளியே பார்த்த போது, மர்ம நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உடனே, மேதாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டிற்கு நேற்றுமுன்தினம் அதிகாலை வந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 சவரன், 2 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினர். இதில், மாங்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (எ) பில்லுவிக்கி (26) மற்றும் செனாய் நகர் பகுதியை சேர்ந்த காராமணி (எ) வினோத்குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: