சின்னசேலம் அருகே சோகம்; குலதெய்வம் கோயிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி விபத்து: சேலம் பெண் பலி

சின்னசேலம்: குலதெய்வம் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சின்னசேலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த பெண் பலியானார். அவரது கணவர் உட்பட 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினார்கள். சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவரது மனைவி கோமதி (42). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களின் குலதெய்வம் கோயில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே நந்திமங்கலம் என்ற ஊரில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் ஒரு காரில் ஆறுமுகம், அவரது மனைவி கோமதி மற்றும் உறவினர்கள் நாராயணன், வினோதினி ஆகிய 4 பேரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றனர்.

காரை விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றார். அங்கு குலதெய்வமான வடபத்திரகாளியம்மன் கோயிலில் வழிபட்டுவிட்டு மாலை அதே காரில் 4 பேரும் ஊர் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தாகம்தீர்த்தாபுரம் அருகே விருத்தாசலம்-சேலம் நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது கார் வேப்ப மரத்தில் மோதி சுமார் 8 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோமதி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது கணவர் உட்பட மற்ற 4 பேரும் காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த விபத்து குறித்து ஆறுமுகம் புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: