பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை மார்ச் 16 வரை கைது செய்ய தடை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் இம்ரான் கானை கைது செய்ய பல நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20-ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதற்கிடையே இவ்வழக்கு நேற்று இஸ்லாமாபாத் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை கைது செய்து வருகிற 29-ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் லாகூரில் இன்று தேர்தல் பேரணி இம்ரான்கான் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்ரான் கானை இன்று கைது செய்ய இஸ்லாமாபாத் போலீசார் ஹெலிகாப்டர் மூலம் லாகூரில் உள்ள அவரது வீடு அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறப்பு போலீஸ் படையினர் இம்ரான்கான் வீடு இருக்கும் சாமர் பார்சி பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டனர். இந்தநிலையில் இம்ரான் கானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட் பிடிவாரண்ட்டை ரத்து செய்து இம்ரான் கானை வருகிற 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: