வலம்புரிவிளை உரக்கிடங்கில் தொடர் தீ விபத்து கேமராக்கள் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு ஜங்சன் பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனை தவிர மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகள் நாகர்கோவில் மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 நுண்ணுரம் செயலாக்கம் மையங்கள் மூலம் உரமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. தீவிபத்து ஏற்படும்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குப்பையில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைக்கும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மேலும் தீவிபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் குப்பை கிடங்கை கண்காணிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மேற்பார்வையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர்நல டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் ஆகியோர் செல்போன்களில் பார்க்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் 3 ஷிப்டு முறையில் தலா 6 பணியாளர்கள் காலை, மாலை, இரவு என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்று முன்பு மாநகராட்சி ஊழியர்கள் தீஅணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் உள்ளது. தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை குழாய்கள் மூலம் அணைக்கவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ரோந்து பணி மற்றும் கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பு என இருப்பதால், வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீவிபத்து ஏற்படாமல் தடுக்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: