கள்ளக்குறிச்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு சீல் வைப்பு

*நகராட்சி அதிகாரிகள் அதிரடி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் சேலம் மெயின்ரோடு பகுதியில் உள்ளது. இங்கு 253 கடைகள் உள்ளது. இந்த கடைகளில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் விற்பனை நடைபெறுகிறது. வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடை வியாபாரிகளிடம் விரைந்து செலுத்திடுமாறு நகராட்சி நிர்வகாத்தின் சார்பில் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

மேலும் குறைந்தது தலா ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாடகை பாக்கி பணம் செலுத்தாத வியாபாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 53 கடை வியாபாரிகள் நீண்ட நாட்களாக நிலுவை தொகை செலுத்தாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்று நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி ஊழியர்களை கொண்டு தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஒலிபெருக்கியின் மூலம் வாடகை நிலுவை பணத்தை செலுத்திட வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதில் சில வியாபாரிகள் தானாக முன்வந்து நிலுவை தொகையை செலுத்தியுள்ளனர். இதில் 12 வியாபாரிகள் நிலுவை தொகை செலுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் இருந்து வந்ததையடுத்து அந்த 12 கடைகளையும் நகராட்சி ஆணையர் குமரன் முன்னிலையில் ஊழியர்கள் பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை காய்கறி வியாபாரிகள் உடனடியாக செலுத்திட வேண்டும். மேலும் பேருந்து நிலையத்தில் கடை வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் நிலுவை தொகையை உடனடியாக செலுத்திட வேண்டும். காலம் தாழ்த்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தாத நபர்களையும் கண்டறிந்து பலமுறை நகராட்சி ஊழியர்கள் நேரடியாக வீட்டுக்கு சென்று அறிவிப்பு வழங்கியும் நிலுவை தொகை செலுத்தாததால் சொத்து வரி பாக்கி செலுத்திட முதற்கட்டமாக அரசு வழக்கறிஞர் வாயிலாக அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை பாக்கி ஆகியவைகளை உடனடியாக செலுத்திட வேண்டும் என்றார்.

Related Stories: