தமிழ்நாடு-கேரளா இடையே டிசம்பருக்குள் மின்சார ரயில்: மதுரை கோட்ட மேலாளர் தகவல்

நெல்லை: தமிழ்நாடு-கேரளாவை இணைக்கும்  வழித்தடத்தில்  மின்மயமாக்கல் பணி டிசம்பருக்குள் முடியும்  என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நெல்லையில் நேற்று தெரிவித்தார். நெல்லை - தென்காசி இடையே 72 கிமீ தூரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்தா  இவ்வழித்தடத்தை நேற்று ஆய்வு செய்தார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாதன் அனந்த் மற்றும் தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வு நெல்லையில் நேற்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக மதுரை கோட்ட மேலாளர் பத்மநாதன் அனந்த் கூறுகையில், ‘‘சோதனையில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் மின்சார  ரயில் விரைவில் இயக்கப்படும். விருதுநகர், தென்காசி, செங்கோட்டை ரயில் பாதையில் மின் மயமாக்கல் பணி விரைந்து நடந்து வருகிறது. செங்கோட்டை பகவதிபுரம் பாதையில் மின் மயமாக்கல் இம்மாதத்திற்குள் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளன. செங்கோட்டையிலிருந்து புனலூர் பாதையில் சுரங்க வழிகளில் அதிக பாலங்கள், குகைகள் உள்ளதால்  காலதாமதமாகிறது. தமிழ்நாடு - கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணிகளை வரும் டிசம்பருக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: