தமிழ்நாட்டு ஆவணப் படம், நாட்டு நாட்டு பாடல் இந்திய படங்களுக்கு 2 ஆஸ்கர் விருது: 14 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கவுரவம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற தமிழ் ஆவண குறும்படத்திற்கும் என 2 இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர் விருதை இந்தியர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கும் திரையுலக கலைஞர்களுக்கும் வழங்கப்படும் உயர்ந்த விருது ஆஸ்கர் ஆகும். இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது விழா டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பிற டெக்னீஷியன்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பு உபசரிப்பு நடந்தது.

ஆஸ்கர் விருது விழாவில் சிறப்பு தொகுப்பாளராக பங்கேற்க தீபிகா படுகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் கறுப்பு நிற நீளமான கவுன் அணிந்து ஒய்யாரமாக விழாவில் பங்கேற்றார். இந்த விருது விழாவில் இந்தியா சார்பில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான போட்டியில் இடம்பெற்றது. ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படமும் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ என்ற ஆவண படமும் அந்தந்த பிரிவில் போட்டியில் இருந்தன. கடைசியாக 2009ல் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வென்றார். அதே படத்துக்காக ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டியும் விருது வென்றார். இதுதான் பல ஆண்டுகள் கழித்து இந்தியர்கள் பெற்ற ஆஸ்கர் விருதுகளாகும்.

இந்நிலையில் இப்போது 14 ஆண்டுகள் கழித்து 3 இந்திய படங்கள் இறுதி போட்டிக்கு சென்றதால் இந்திய சினிமா ரசிகர்கள் இந்த விருது விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

விழா தொடங்கிய சிறிது நேரத்தில் தீபிகா படுகோன் மேடைக்கு வந்தார். அவர் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலின் சிறப்புகளை பற்றி பேசினார். இந்த பாடல், இணையதளத்தில் வைரலானது பற்றியும், உலக அளவில் இந்த படம் பெரும் வசூலை குவிக்க இந்த பாடலும் ஒரு காரணம் என்றும் கூறிய அவர், இப்போது இந்த பாடலின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்தார். அப்போது விழா அரங்கில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘நாட்டு நாட்டு’ பாடலின் தெலுங்கு வெர்ஷனை பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச், கால பைரவா ஆகியோர் மேடையில் தோன்றி பாடினர்.

அப்போது சர்வதேச நடனக் கலைஞர்கள் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தினர். இந்த இசை நிகழ்ச்சியை கேட்டு அரங்கமே அதிர்ந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் விருதுகள் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. சிறந்த படமாக ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை பிராண்டன் ஃப்ரஸெர் வென்றார். ‘தி வேஹ்ல்’ என்ற படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை மிசெல் இயோ, ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்துக்காக பெற்றார். மிசெல் இயோ, மலேசியாவை சேர்ந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரன்ட்’ திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

சிறந்த அனிமேஷன் படம் - குயில்லர்மோ டெல்ட்ரோஸ் பினோச்சியோ, சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்), சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்), சிறந்த ஆவணப் படம் - நாவல்னி, சிறந்த தழுவல் திரைக்கதை விருதை வுமன் டாக்கிங், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற படமும் பெற்றது. சிறந்த இயக்குனருக்கான விருதை டேனியல் குவான், டேனியல் ஸ்ச்சிநெர்ட் ஆகியோர் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்துக்காக பெற்றனர். சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபரன்ட்’ படத்துக்காக ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் பிரெண்ட் பெற்றார்.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருது ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ படத்திற்கும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது ‘ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ படத்திற்கும் கிடைத்தது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் கதையை அடிப்படையாக கொண்ட ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த ஆவண படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆஸ்கர் விருதை பெற்றனர். தொடர்ந்து குனீத் மோங்கா கூறுகையில், ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருதாகும்’ என்றார்.

அதேபோல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதுகளை வென்றனர். இந்திய குறும்படம், திரைப்படம் ஆகியவற்றிற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டதும் டிவியில் விழாவை பார்த்து வந்த ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். விழா அரங்கில் இருந்த இயக்குனர் ராஜமவுலி, பட ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் கட்டியணைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, அமெரிக்காவில் இருக்கும் பிரபல இசைக்கலைஞர்களான தி கார்பெண்டர்ஸின் இசையை கேட்டு தான் நான் வளர்ந்தேன். இதையடுத்து தற்போது ஆஸ்கார் விருதை வாங்கியுள்ளேன் என்று பேசினார். மேலும் இந்த விருதை இந்திய திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதாக கூறிய கீரவாணி, இயக்குனர் ராஜமௌலியை பாராட்டி ஆங்கில பாடல் பாடி நன்றி தெரிவித்தார். அப்போது பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

Related Stories: