திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 21ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 22ம் தேதி உகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் 21ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி அர்ச்சகர்களால் நடக்கிறது. அப்போது, மூலவர் சிலை மீது முழுவதுமாக துணியால் மூடப்பட்டு சுத்தம் செய்த பிறகு நாமகட்டி, திருச்சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கிழங்கு போன்ற புனித வாசனை திரவியம் கலந்து கோயில் முழுவதும் தெளிக்கப்பட உள்ளது. அதன்பின், சுவாமியின் மூலவர் மீது வைக்கப்பட்ட துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர்கள் ஆகம முறையில் செய்ய உள்ளனர். மதியம் 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories: