தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கும் ஐபிஎஸ் அதிகாரி: வீடியோ வெளியிட்ட அகிலேஷ்; போலீஸ் மறுப்பு

மீரட்: தொழிலதிபர் ஒருவரிடம் உத்தரபிரதேச ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோவை அகிலேஷ் யாதவ் வெளியிட்டதை, பழைய வீடியோ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி அனிருத் சிங் என்பவர், வீடியோ காலில் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோவை சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உத்தரபிரதேச ஐ.பி.எஸ் அதிகாரி மீது புல்டோசர் பாயுமா? அல்லது தலைமறைவான ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலில் மேலும் ஒருவரது பெயர் சேர்க்கப்படுமா? இந்த விஷயத்தை ஆளும் பாஜக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு மீரட் போலீசார் பதில் அளித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட பதிவில், ‘தாங்கள் வெளியிட்ட இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. மீரட் மாவட்ட காவல் துறையுடன் தொடர்புடைய வீடியோ அல்ல. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரபிரதேச டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீரட் மாவட்ட எஸ்பியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அனிருத் சிங், தற்போது வாரணாசியில் பணியாற்றி வருகிறார். இந்த விவகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுகுறித்து வாரணாசி கமிஷனரிடம் அறிக்கை கேட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: