நெல்சன் மாணிக்கம் சாலையில் விபத்து பிளாட்பாரத்தில் பைக் மோதியதில் மாணவர் பலி; நண்பர் படுகாயம்: அசூர வேகத்தால் நடந்த விபரீதம்

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இன்று அதிகாலை 2 மணி அளவில் படுவேகமாக சென்ற பைக்  திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பிளாட்பாரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பைக் ஓட்டிவந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் பின்னாடி அமர்ந்திருந்த நபர் காயங்களுடன் இறந்துகிடந்து நண்பரின் உடலை பார்த்து கதறி அழுதுகொண்டிருந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற மக்கள், காயம் அடைந்த நபருக்கு உதவி செய்ததுடன் இதுசம்பந்தமாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் வந்து காயம் அடைந்த நபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  நடத்தினர். இதில் விபத்தில் இறந்த நபர் தென்காசி மாவட்டத்ைத சேர்ந்த இப்ராஹிம்(21) என்பதும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் 3ம் ஆண்டு படித்துவந்தவர் என்பதும் இவரது நண்பர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவபாரதி(21) என்பதும் இவர் அதே மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகின்றார் என்பதும் தெரியவந்தது.

சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியில் வசித்துவரும் நண்பர் வெள்ளை பாண்டி என்பவரை பார்ப்பதற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து பைக்கில் இருவரும் சென்னைக்கு வந்துள்ளார். இதன்பின்னர் அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு அண்ணாநகரில் பிரியாணி கடை நடத்திவரும் மற்றொரு நண்பர் விஷ்ணுவை பார்ப்பதற்காக பைக்கில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுசம்பந்தமாக போக்குவரத்து போலீசார் கூறும்போது, ‘’அண்ணாநகர், அமைந்தகரை பகுதியில் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அசுரவேகத்தில் செல்கின்றனர். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இளைஞர்கள் பைக்கில் வேகமாக செல்வதை குறைப்பது கிடையாது. இனிமேலாவது இளைஞர்கள் கவனமாக செயல்பட வேண்டும்’ என்றனர்.

Related Stories: