வருசநாடு பகுதியில் தென்னை விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்டும் திட்டங்கள் வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு : வருசநாடு பகுதியில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை அய்யனார்புரம் ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடக்கிறது. அதுபோல், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, குமணன்தொழு, மூலகடை உள்ளிட்ட ஊர்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் தென்னை விவசாயம் அதிகளவில் காணப்பட்டது.

ஆனால் தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினால் தென்னந்தோப்புகள் சில இடங்களில் சில நாட்களாக பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயத்தில் கேரளாவில் இருந்து பரவிய வாடல்நோய் கூன்வண்டு தாக்குதல் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் போனதாலும் தென்னை விவசாயம் பாதிக்குமேல் குறைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்னை விவசாயத்திற்கு போதிய அளவில் விலை கிடைக்காமல் தென்னை மரங்களை அழித்துவிட்டு மாற்று விவசாயத்திற்கு விவசாயிகள்.

மாறி வருகின்றனர். கடந்த சில தினங்களாக தேங்காய் ரூ.8 முதல் ரூ.9 வரை விலை போய்க் கொண்டிருக்கிறது. மேலும் கேரளாவில் இருந்து பரவிய வாடல் நோயை விரட்டி விட கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்தறை அதிகளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் தென்னை விவசாயத்தில் வாடல் மற்றும் நோய் தாக்குதல் வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடுவதற்கு செய்யப்பட்ட திட்டங்களாலும் எந்த பலனும் ஏற்படவில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

இதனால் தென்னை விவசாயம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் குறைந்து வருகிறது. இந்த விவசாயத்தை அழித்து வாழை, இலவமரம், எலுமிச்சை, கொட்டை முந்திரி, உள்ளிட்ட விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் அதிக அளவில் தென்னை விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்ட தேவையான திட்டங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் இதற்கு தென்னை விவசாயிகள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை விவசாயிகள் கூறுகையில், ‘‘தென்னையை நட்டு வளர்த்தால் அதிகமான மகசூல் பல நூறு ஆண்டுகளுக்கு கிடைக்கும். ஆனால் நட்ட மரங்கள் பட்டுப்போனதால் அதனை வெட்டி எடுக்கும் நிலை தற்பொழுது ஏற்பட்டு வருகிறது எனவே வேறு விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தென்னை விவசாயத்திற்கு அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தென்னை விவசாயத்தை காக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

இதுகுறித்து‌ தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘‘தேங்காய் விளைச்சல் இருந்தும் விலையில்லாததால், தென்னை மரங்களை அழித்து வருகின்றனர். எனவே, தென்னை விவசாயத்திற்கு அனைத்து மானிய உதவிகளும் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு மானிய அடிப்படையில் உதவி வழங்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து வருசநாடு பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரிகள் கூறுகையில், ‘‘தேங்காய் விலை தற்போது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் ஏற்றி டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 20 லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது’’ என்றனர்.இதுகுறித்து கடமலைக்குண்டு தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘அரசு கொடுக்கின்ற உரம் மருந்து போன்ற மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.’’ என்றனர்.

Related Stories: