ஆம்பூரில் 2 ஆண்டுக்கு முன்பு தலைமறைவானவர் ₹2 கோடி சீட்டு பணம் மோசடி செய்தவரை சிறைபிடித்த மக்கள்-போலீசார் மீட்டு விசாரணை

ஆம்பூர் : ஆம்பூரில் சீட்டு பணம் ₹2 கோடி மோசடி செய்துவிட்டு 2 ஆண்டுக்கு முன்பு தலைமறைவானவரை மக்கள் சிறைபிடித்தனர். அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஜலால் பேட்டை 3வது தெருவை சேர்ந்தவர்  மசியுல்லா(50), ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்த  இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு நடத்தி வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடன் ஆம்பூர் ரெட்டிதோப்பை சேர்ந்த  அஸ்லம் பாஷா என்பவர் சேர்ந்த நிலையில், கூட்டாக சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்கள் ஆம்பூரில் மளிகை தோப்பு, ஜலால் ரோடு, ஜட்ஜ் மனை, வாத்திமனை, நடராஜபுரம், ஆயிஷா பீ நகர், ஹவுசிங் போர்டு, மாங்கா தோப்பு, பன்னீர் செல்வம் நகர் உட்பட பல்வேறு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோரை உறுப்பினராக சேர்த்து சீட்டு நடத்தி வந்துள்ளனர்.  

மாதத்தில் 5ம் தேதி துவங்கும் இந்த சீட்டு ஏலமானது ஒவ்வொரு நாளாக அந்த மாதத்தில் 25ம் தேதி வரை நடந்து வந்துள்ளது. இந்த சீட்டிற்காக உறுப்பினர்கள் வாயிலாக சுமார் ₹3 கோடி வரை வசூல் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென மசியுல்லா மற்றும் கூட்டாளியான அஸ்லம் பாஷா ஆகியோர் தலைமறைவாகினர். இதுகுறித்து சீட்டு கட்டியவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மசியுல்லா தனது குடும்பத்தினரை  ஜலால் பேட்டையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து விட்டு சென்னையில் தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று மதியம் ஜலால் ரோட்டி லுள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நடந்து சென்ற மசியுல்லாவை சீட்டு கட்டி ஏமாந்த இருவர் கண்டுபிடித்து கூப்பிட்டுள்ளனர்.

உடன் சுதாரித்த அவர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தனது வீட்டிற்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டுள்ளார். பின்னர், துரத்தி வந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிறிது நேரத்தில் அந்த வீட்டின் முன்னால் சீட்டு கட்டியவர்களில் 200க்கும் மேற்பட்டோர் கூடினர்.

மசியுல்லாவை சீட்டு கட்டியவர்கள் சிறைபிடித்ததை அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் 15க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து வந்து, வீட்டில் பதுங்கி இருந்த மசியுல்லாவை பிடித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சீட்டு கட்டியோர் தங்களது புகார் மனுக்களை ஆம்பூர் டவுன் போலீசாரிடம் கொடுத்தனர். ஒருவர் பிடிபட்ட நிலையில் அஸ்லம்பாஷா தலைமறைவாக உள்ளார்.இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். சீட்டு நடத்தி மோசடி செய்தவரை சீட்டு கட்டியவர்களே சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: