உருட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம் அதிமுகவை சீண்டி பார்த்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அண்ணாமலைக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ எச்சரிக்கை

தூத்துக்குடி: ‘அதிமுகவை சீண்டி பார்த்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்து உள்ளார். தூத்துக்குடி சிலுவைப்பட்டி விலக்கு பகுதியில் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர்ராஜு எம்.எல்.ஏ பேசியதாவது:  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழை யாரும் அழிக்க முடியாது. அவர்களுக்கு பின்னர் 3ம் தலைமுறையாக இபிஎஸ் வலம் வருகிறார். விரைவில் அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய இருப்பது காலத்தின் கட்டாயம். அதிமுகவை யாராலும் உரசி பார்க்க முடியாது.

இது திராவிட பூமி என்பதை அண்ணாமலை உணர வேண்டும். இனி வரும் காலங்களில் பாஜவுடன் கூட்டணி உண்டா, இல்லையா? என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.

டெல்லியில் சந்திரசேகரை பிரதமராக்கிய போது எங்கள் பங்கு இருந்தது. அதேபோல் வாஜ்பாயை பிரதமராக்கி முதலில் அமர வைத்தது நாங்கள் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியுமா? நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அவர். அண்ணாமலை ஐபிஎஸ் படித்திருந்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவை மிரட்டி சீண்டி பார்த்தால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிடும்.  உங்கள் அதிகாரம் டெல்லியில் தான் உள்ளது.  

தலைமையின் உத்தரவுபடி நாங்கள் கட்டுப்பாடுடன் இருக்கிறோம். அண்ணாமலை செயல்பாடு சரியில்லாததால் தான் அவரது கட்சியிலிருந்து பலர் வெளியேறி அதிமுகவில் இணைகிறார்கள். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், போன்றவர்கள் பாஜவில் இணைந்த போது நாங்கள் ஏதாவது கூறினோமா?. அண்ணாமலையின் உருட்டல்களுக்கெல்லாம் அதிமுக அடிபணியாது. இனி வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: