இயற்கை வளங்களை சுரண்டுவதால் ஆபத்து இமாச்சலில் 2022ம் ஆண்டில் 117 நிலச்சரிவுகள் பதிவு: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் அதிக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறையின் புவியியல் நிபுணர் வீரேந்திர சிங் தார் வௌியிட்டுள்ள அறிக்கையில், “இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7 மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.  2020ம் ஆண்டில் 16 நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், இது 2022ம் ஆண்டு 117ஆக பதிவாகி உள்ளது. அங்கு நிலச்சரிவு பாதிப்பு ஏற்படக் கூடிய 17 ஆயிரத்து 120 இடங்களில் 675 அதிக குடியிருப்புகள்,  முக்கிய உள்கட்டமைப்புகள் உள்ள இடங்களாக உள்ளன.

அதிதீவிர கனமழை, இயற்கையாக நிகழும் மலைச்சரிவுகள், பாறைகளை வெட்டுவது போன்றவையே நிலச்சரிவுகள் அதிகரிக்க காரணம். சாலைகளை விரிவாக்கம் செய்யவும், வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்காகவும் சுரங்கம், நீர்மின் திட்டங்கள் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்காக பாறைகளை அதிகளவில் வெட்டுவது போன்றவையே நிலச்சரிவுகள் அதிகரிக்க காரணம்” என்று தெரிவித்துள்ளார். பருவமழைக்காலங்கள் குறைந்து விட்டாலும், ஒரே நேரத்தில் அதிதீவிர கனமழை பொழிவு, அதிகரிக்கும் வெப்பம் ஆகிய காரணங்களால் மலையடிவாரத்தில் பாறைகள் வெட்டப்பட்ட இடங்களில் அடர்த்தி குறைவதும் நிலச்சரிவு அபாயங்களுக்கு காரணம் என காலநிலை மாற்ற நிபுணர் சுரேஷ் அட்ரே கூறியுள்ளார்.

2022ல்மழைக்காலங்களிலேயே அதிகளவில் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறையின் சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா  தெரிவித்துள்ளார். பொதுவாக பெருகி வரும் மக்கள் தொகையும், வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக இயற்கை வளங்களை சுரண்டுவதும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு முக்கியக் காரணம். இதேநிலை நீடித்தால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வே பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்   எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சாலைகள் விரிவாக்கம் போன்ற காரணங்களால் ஏற்படும் நிலச்சரிவுகளை குறைக்கவும், தடுக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளிக்கவுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிலச்சரிவு பாதிப்புகளை சீரமைத்தல், தடுத்தல் ஆகியவற்றுக்காக ரூ.300 கோடி செலவிடப்படும் என இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறியுள்ளார்.

Related Stories: