சென்னை கன்டோன்மென்ட் கழக தேர்தல் 15 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும்

சென்னை: சென்னை கண்டோன்மென்ட் கழக தேர்தலில், 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள விஷயத்தில், தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்  முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சென்னை கண்டோன்மென்ட் போர்டு  தேர்தல் வரும் ஏப்ரல் 30ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கண்டோன்மெண்ட் எல்லைக்குள் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் குடிதண்ணீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கண்டோன்மென்ட் கழகத்தை சார்ந்துள்ளனர்.

இங்கு வாழ்ந்து வரும் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து வந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருக்கும் இந்த நேர்வில் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, நீக்கப்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கி கண்டோன்மென்ட் கழக தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், மாநில அரசு கண்டோன்மென்ட் கழக எல்லைக்குள் வாழ்ந்து வரும் குடிமக்களின் வாக்குரிமை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

Related Stories: