வியாசர்பாடி கூட் செட்டில் லாரி டிரைவரிடம் மாமூல்: 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி கூட் செட் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லாரிகள் வந்து செல்கிறது. இங்கிருந்து அரிசி, மிளகாய் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்கின்றனர். இதன்காரணமாக எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், லாரி டிரைவர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதாகவும் பணம் கொடுக்காதவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் டிரைவர்கள், லாரியின் உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து வியாசர்பாடி கூட்செட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பரந்தாமன், இதுசம்பந்தமாக எம்கேபி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘’லாரி டிரைவர்களை மிரட்டி வியாசர்பாடி பகுதியில் சிலர் மாமூல் வசூலித்து வருவதாகவும் மாமூல் தரவில்லை என்றால் லாரி டிரைவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். எனவே, மாமூல் கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவடிக்ைக எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி டிரைவர்களிடம்  மாமூல் வசூலித்ததாக வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34), தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்த பூவரசன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர். இதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதுசம்பந்தமாக பார்த்தசாரதி என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: