பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 10 ஆண்டாக பராமரிப்பின்றி கிடக்கும் தண்ணீர் தொட்டி: மீனவ தொழிலாளர்கள் கடும் அவதி

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது.இந்த துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் துறைமுக வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த துறைமுகத்தில் மீன் வியாபாரம் செய்தல், மீன்களை வகைப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல், வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தல், வலை பின்னுதல், கருவாடு உலர வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் எந்த நேரமும் துறைமுக வளாகத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இங்குள்ளவர்களின் நலன் கருதி கடந்த 10 வருடங்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் தண்ணீர் தொட்டியில் தேக்கப்பட்டு அங்கிருந்து எடுத்து வரப்படும் தண்ணீர் துறைமுகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் சுற்றுப்புற பகுதியில் உள்ள தெருக்களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.

இத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. பின்னர் தொடர்ந்து கடந்த 10 ஆண்டாக எவ்வித பயனுமின்றி இருந்து வருகிறது. இங்கிருந்து குடிநீர் செல்வதற்கு பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் பூமிக்கு அடியிலேயே உடைந்து எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. மீன்வளத்துறை சார்பில் பல லட்ச ரூபாய் செலவு செய்து, புதியதாக கட்டி தொடர்ந்து பத்து வருட காலமாக எந்த பயனும் இல்லாமல் உள்ளதால், துறைமுக வளாகத்தில் வேலைபார்ப்போர் கடும் சிரமப்படுகின்றனர்.

இங்குள்ள கழிவறைகளுக்கு இந்த தொட்டியிலிருந்தே தண்ணீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், கழிப்பறை கட்டிடமும் உடைந்து சேதமடைந்து எந்த பயனும் இல்லாமல் உள்ளதால் அங்கும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் கழிவறை கட்டிடத்துக்கு தொடர்ந்து செல்லாமல் இருந்ததால் கழிவறை கட்டிடத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டு கட்டிடமும் உடைந்து சேதமடைந்து விட்டது. பழையாறு துறைமுகம் மற்றும அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் பல்வேறு தேவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் தொடர்ந்து தட்டுப்பாடு இருந்து வருகிறது.

எனவே பத்து வருடங்களாக பயன்பாடு இன்றி இருந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிடத்தை பழுது நீக்கம் செய்து அதில் தண்ணீரை தேக்கி பழையாறு துறைமுகம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: