சிவகங்கைக்கு வந்த எடப்பாடிக்கு கருப்புப் பலூன்களுடன் ஓபிஎஸ் அணி கண்டன ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு கோஷம்; பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பால் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கைக்கு  வந்த எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகம் முன் அதிமுக ஓபிஎஸ் அணியினர், கருப்பு பலூன்களை பறக்க விட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை, திருச்சி பைபாஸ் சாலையில் அதிமுக சார்பில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். முன்னதாக அவர் அரண்மனை வாசலில் உள்ள வேலு நாச்சியார் சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

அதில், ‘அதிமுகவின் தொடர்ச்சியான 8 தோல்விகளுக்கு காரணமான துரோகி’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. சிவகங்கைக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வந்த அதே நேரத்தில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்  அசோகன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்,  நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், சரவணன், மாரிமுத்து, கேவி.சேகர் உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

‘‘அதிமுக அடிப்படை சட்ட விதிகளை புறம்தள்ளி, கட்சியை அபகரிக்க நினைக்கும், தொண்டர்களை சேர விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம். அவரால் தொடர்ச்சியாக 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இதனால் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் பதவி விலக வேண்டும். சிவகங்கை மாவட்டத்திற்குள் அவர் நுழையக் கூடாது’’ என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். தொடர்ந்து, எடப்பாடியை குழந்தை வடிவத்தில் சித்தரித்து ஒட்டப்பட்ட படத்துடன், ஏராளமான கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிவகங்கை நகர் மற்றும் திருப்புத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, இரவோடு இரவாக சிலர் கிழித்து எறிந்தனர்.

* ஜெயலலிதாவின் வீட்டையே கொள்ளையடித்தவர் எடப்பாடி: ஓபிஎஸ் ஆதரவாளர் காட்டம்

சிவகங்கையில் ஓபிஎஸ் அணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் அளித்த பேட்டியில், ‘‘எடப்பாடி அதிமுகவிலிருந்து தானாக வெளியேற வேண்டும். காசுக்காக சேர்ந்த கூட்டத்தை வைத்துக் கொண்டு, கட்சியை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். , குன்றக்குடி கோயிலுக்கு சென்று, அவருக்கு எதிராக காசை வெட்டிப் போட்டு செல்வோம். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வீட்டையே கொள்ளையடித்தவர். முதல்வர் பதவியை கொடுத்த சசிகலாவையே கடுமையாக விமர்சித்தார். நன்றி கெட்ட மனிதருக்கு நல்லது செய்தவர்கள் வரிசையில் அண்ணாமலையும் சேர்ந்துள்ளார். எடப்பாடி துரோகத்தில் ஊறிய நச்சுப்பாம்பு. இப்போது அவரது தகுதி அண்ணாமலைக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

Related Stories: