கொடைக்கானல்: குட்டிகளுடன் முகாமிட்டிருந்த யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு சென்றதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியை சுற்றி பார்க்க சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவர். இந்த பகுதிக்கு செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதேபோல மோயர் பாயின்ட், தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டுயானைகள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.