கடந்த ஆண்டு முதல் இதுவரை 3.27 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5104 கோடி கொள்முதல் பணம் வழங்கப்பட்டுள்ளது: கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

அண்ணாநகர்: கடந்த ஆண்டு முதல் இதுவரை,3.27 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5104 கோடி கொள்முதல் பணம் வழங்கப்பட்டுள்ளது என,கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அண்ணாநகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் நேற்று காலை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம்,  தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் சிவஞானம் ஆகியோர் இணைந்து, அங்கு ரேஷன் கடைக்கு கொண்டு செல்லப்படவிருந்த அரிசிகளின் தரம், சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவற்றின் கையிருப்பு, தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்,  ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் 35 ஆயிரம் நியாயவிலை கடைகளுக்கும் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 2866 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக இதுவரை 25.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2022ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 3.27 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5104 கோடி கொள்முதல் பணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 756 அரவை ஆலைகள் மூலமாக மாதமொன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரைக்கப்படுகிறது. நியாயவிலை கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க 308 கிடங்குகள் உள்ளன. பொங்கல் தினத்தில் வழங்கப்பட்ட அரிசி, கரும்புக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணி நிரந்தர கோரிக்கை நிறைவேற்றப்படும்.

மேலும், ரேஷன் கடைகளில் விற்பனை ஆகாத பொருட்களை மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டாம் என பதிவாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, ரேஷன் கடைகளில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி செல்லலாம். குறிப்பிட்ட பொருளை வாங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்தக்கூடாது.ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். அவர்களை மாத இறுதியில் வந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் வலியுறுத்தக்கூடாது என அந்தந்த கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவற்றை அதிகாரிகள் கண்காணிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.’’ என கூறினார்.  அண்ணாநகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்  கிடங்கில் நேற்று காலை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை  செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர்,  ரேஷன் கடைகளில் நுகர்வோர் விருப்பத்தின்படி பொருட்களை வாங்கலாம் என அவர்   தெரிவித்தார்.

* ரேஷன் கடைகளில் தங்களின்  விருப்பத்துக்கு ஏற்ப நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி செல்லலாம்.  குறிப்பிட்ட பொருளை வாங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள்  வற்புறுத்த கூடாது.

Related Stories: