முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி என்.எல்.சி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி என்எல்சி பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன் நிலக்கரி சுரங்கமும் நாட்டின் மின்சார தேவைக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனும் முக்கியம். என்எல்சி நிறுவனம் துவங்கிய 1956ம் ஆண்டு முதல் இன்றுவரை அதன் வளர்ச்சிக்காக நிலத்தை கொடுத்த அப்பகுதி மக்களின் எந்த தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.

நாட்டின் தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், தங்களின் நலன்கள் பாதிக்கப்பட்டாலும், நாட்டு நலன் கருதி நிலம் அளித்த மக்கள் இன்னும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த துயரை போக்க, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக சார்பில் அவ்வப்போது குரல் கொடுக்கப்பட்டது. சமீபகாலமாக வாரந்தோறும் தமிழக அமைச்சரும், அதிகாரிகளும் அந்த மக்களை அழைத்து பேசுகிறார்கள். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி என்எல்சி பிரச்னையை தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும் உடனடியாக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் அப்பகுதி மக்களுக்கான போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: