ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை ஊழல் தடுப்பு சட்டப்படி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திருவில்லிபுத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான பணமோசடி வழக்கை ஊழல் தடுப்பு சட்டப்படி விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, குற்றப்பிரிவு போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி, கடந்த 2022, ஜன. 5ம் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவருக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதால் 2022 ஜன. 13ம் தேதி வெளியே வந்தார். இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 43 பக்க குற்றப்பத்திரிகையை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி வள்ளிமணாளன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் படி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related Stories: