வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்க்க 7.28 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்

கடந்த 2 நாட்களில் மட்டும் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 5,43,155

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,28,432 பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு முகாம்கள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 5,43,155 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 10 மாநிலம் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4ம் தேதி எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இப்பணிகள் டிசம்பர் 4ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நடைமுறை சிக்கல்களை காரணமாக படிவங்களை சமர்ப்பிக்க 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19ம் தேதி தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இருந்த மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 97.37 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த வாக்காளர்களில் 15.18 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2.77 கோடி ஆண் வாக்காளர்களும், 2.66 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். நீக்கப்பட்டவர்களில், 26.32 லட்சம் பேர் இறந்த வாக்காளர்கள், 66.44 லட்சம் பேர் முகவரியில் இல்லாதவர்கள், 3.39 லட்சம் பேர் இரட்டை பதிவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. ஆனால், முகவரி மாற்றம் காரணமாக நீக்கப்பட்டவர்கள், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஜனவரி 18ம் தேதி வரை படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவம் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் வாக்களார் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆன்லைன், வாக்குச்சாவடி மையங்கள், பிஎல்ஓக்களிடம் தங்களின் விண்ணப்பங்களை கொடுத்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பொதுமக்கள் வசதிக்காக, கடந்த டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் தேவையான அனைத்து படிவங்களும் வழங்கப்பட்டன. இப்பணிகளை கண்காணிக்க, ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு, வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக, ஜனவரி 25ம் தேதி வரை இலவசமாக இருப்பிடச் சான்று பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்கள் நடத்த சிறப்பு முகாம்கள் மற்றும் கடந்த 10 நாட்களில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க 7 லட்சத்து 28 ஆயிரத்து 432 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்க 9 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதிகபட்சமாக டிசம்பர் 28ம் தேதி ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 86 ஆயிரத்து 362 விண்ணப்பங்களும், 27ம் தேதி 2 லட்சத்து 56 ஆயிரத்து 793 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 5 லட்சத்து 43 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் வரும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்த, ஜனவரி 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் இடம்பெறும் வாக்காளர்களே வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • பொதுமக்கள் வசதிக்காக, கடந்த டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன
  • இந்த முகாம்களில் தேவையான அனைத்து படிவங்களும் வழங்கப்பட்டன. இப்பணிகளை கண்காணிக்க, ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு, வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக, ஜனவரி 25ம் தேதி வரை இலவசமாக இருப்பிடச் சான்று பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: