பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உட்பட லாலு குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

பாட்னா: லாலு பிரசாத்தின் குடும்பத்தினர்  வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தர குறைந்த விலையில் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, லாலு மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், லாலுவின் குடும்பத்தினர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

லாலுவின் மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் ஹேமா யாதவ் மற்றும் ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ அபு டோஜனா ஆகியோருக்கு சொந்தமான பீகாரின் பாட்னா, புல்வாரி ஷெரீப், டெல்லி, ஜார்க்கண்ட்டின் ராஞ்சி மற்றும் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 24 இடங்களில்  சோதனை நடந்தது. இதில், தெற்கு டெல்லியில் உள்ள பீகார் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்விக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வீடுகளில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories: