நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக செப்டம்பரில் பிரசாரத்தை தொடங்கும் மோடி: பலவீனமான 160 தொகுதிகளில் தீவிர கவனம்

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் செப்டம்பரில் தொடங்க உள்ள நிலையில், பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆளும் பாஜக தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் பலவீனமாக உள்ள 160 மக்களவைத் தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள பாஜக, அந்தத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவதற்காக வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கான ேதர்தல் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக தேர்தல் குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்கண்ட 160 தொகுதிகளில் பிரதமர் மோடி 50 முதல் 60 கூட்டங்களை நடத்த உள்ளார். 3 முதல் 4 மக்களவைத் தொகுதிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்படும்.

இந்த தொகுதிகளில் அரசியல் சார்ந்த கூட்டங்கள் மட்டுமின்றி, அரசின் நலத்திட்ட திட்டங்கள் தொடங்கி வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். மோடி தொடங்கி அமித் ஷா, ஜே.பி நட்டா, ஒன்றிய அமைச்சர்களும் இந்த ெதாகுதிகளில் அடுத்தடுத்து பிரசாரத்தை மேற்கொள்வர். இந்த 160 தொகுதிகளிலும் முதல் கட்ட பிரசாரம்  முடிந்ததும், மீதமுள்ள 383 தொகுதிகளில் பிரதமர் மோடியின் அடுத்த தேர்தல் பிரசார திட்டம் குறித்து  முடிவு செய்யப்படும். வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, மேற்கண்ட ெதாகுதிகளில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுதவிர பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் மோடியின் பிரசாரம் அதிகமாக இருக்கும். வரும் 30ம் தேதி முதல் கட்சியின் அனைத்து அணிகளும் போர்க்கால அடிப்படையில் மக்கள் தொடர்புத் திட்டங்களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: