பூங்கா அமைப்பது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூடலூரில் முதற்கட்ட ஆய்வு

ஊட்டி : கூடலூர் பகுதியில் பூங்கா அமைப்பது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் பூங்காக்கள், மலைச்சிகரங்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனால் மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கூடலூரில் தமிழகம்,கர்நாடகா,கேரளா என 3 மாநிலங்கள் இணைகிறது.

இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். தொலைதூரத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென நீண்ட காலமாக பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுலாத்துறை அமைச்சர், கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் அண்மையில் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அந்த மனுவில், கூடலூர் மார்தோமா நகர் பகுதியில் உள்ள நிலத்தில், சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும். அதற்காக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சுற்றுலா அலுவலர் உமா சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் முதற்கட்ட ஆய்வுப் பணியை தொடங்கினர். ஆய்வின் போது கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் வெண்ணிலா சேகர், ஆபிதா, சத்தியசீலன் உஸ்மான் ,வர்கீஸ், தனலட்சுமி, சக்கிலா, வாணி மற்றும் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி,கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன், சாம் ஜோசப் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மலை உச்சி வரை நடந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: