முக்கூடல் வியாபாரியிடம் திருடிய பைக்கிற்கு நிறம் மாற்றிய திருடன்

*பறிகொடுத்தவர் கடையிலேயே பெயிண்ட் வாங்கியது அம்பலம்

பாப்பாக்குடி :  நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்  (54). முக்கூடல் மெயின்ரோடு பகுதியில்  பெயின்ட் கடை நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பாக தனது பைக்கை நிறுத்திச்சென்றார். பின்னர் திரும்பிவந்தபோது பைக் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முக்கூடல் எஸ்ஐ ஆக்னல்  விஜய் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கூடல்  காமராஜர் தெருவைச் சேர்ந்த செல்வராஜா (46) என்பவர் சம்பவத்தன்று ரமேஷின் வீட்டின் முன்  நிறுத்தப்பட்டிருந்த இருந்த பைக்கை நைசாக திருடி தனது வீட்டுக்கு தள்ளிச் சென்றார்.

பின்னர் ரமேஷின் கடைக்கே சென்று கருப்பு கலர் பெயிண்ட், பிரஸ்  உள்ளிட்டவற்றை வாங்கி வந்து திருடிய சிவப்பு நிற பைக்கை கருப்பு நிறமாக  மாற்றியதும், அத்துடன் நம்பர் பிளேட்டையும் மாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜாவை கைதுசெய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வாறு முக்கூடலில் பெயின்ட் கடைக்காரரின் பைக் திருடியதோடு அவரது கடையிலேயே பெயின்ட் வாங்கி நிறம் மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: