ஜகார்த்தா: அதிகரிக்கும் மக்கள்தொகை, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, தொடர் பூகம்பங்கள், ஜகார்த்தா தீவு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளிட்ட காரணங்களால் இந்தோனேஷிய தலைநகர் போர்னியா தீவுக்கு மாற்றப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்திய பெருங்கடலும், பசிபிக் கடல்களும் இணையும் இடத்தில் உள்ள இந்தோனேஷியா பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய நாடாகும். இதில் மொத்தம் 17 ஆயிரம் தீவுகள் அடங்கியுள்ளன. தற்போது இதன் தலைநகராக ஜாவா தீவிலுள்ள கடலோர நகரமான ஜகார்த்தா உள்ளது. இந்தோனேஷிய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜாவா தீவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், உலகிலேயே மிக வேகமாக கடலில் மூழ்கி கொண்டுள்ள நகரமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
