தமிழ்நாடு அரசுக்கு தொல்லை தரவே ஓர் ஆளுநரா?: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கி.வீரமணி கண்டனம்..!!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசுக்கு தொல்லை தரவே ஓர் ஆளுநரா?, வதந்திகளும் பொய்யுரைகளும் இங்கு எடுபடாது. 2024 தேர்தலில் ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்களாட்சியை செயல்படவிடாமல், தேக்கத்தை செயற்கையாக உருவாக்கி விஷமப் பிரச்சாரத்தை ஆளுநர் ரவி கட்டவிழ்த்து விடுகிறார்.

தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் என்பதை மறந்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் போல ஆளுநர் செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார். நீங்கள் கற்பனையாகத் தயாரிக்கும் விஷமச் செய்திகள் உங்களுக்கே பூமராங் போல திரும்பிடும் என்பதை உணருவீர்கள். புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையில், பாஜக, சங் பரிவார்களின் முகமூடி கழன்று வீழ்ந்துவிட்டதைக் கண்டு உலகமே சிரிக்கிறது. தமிழ்நாடு மக்களுக்குள்ள தெளிவும், திறனும் முழு இந்தியாவையே மாற்றி காட்டும் என கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கடந்த நான்கு மாதங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அதில் மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: