கோத்தகிரி சாலையில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சம்

கோத்தகிரி:  கோத்தகிரி அருகேயுள்ள வள்ளுவர் நகர் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் உலா வந்த ஒற்றை கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த 2 மாதமாக கொட்டிய கடும் பனிப்பொழிவால்  வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகியது. இதனால் யானை, மான், கரடி, காட்டு மாடுகள் உள்ளிட்டவை உணவு, குடிநீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை கோத்தகிரி, வள்ளுவர் நகர் பகுதிக்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்தது. இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.  சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது. ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அவை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: