சோபியா, ஹர்லீன் அதிரடி அரை சதம் குஜராத் ஜயன்ட்ஸ் 201 ரன் குவிப்பு

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் டி20 ஆட்டத்தில், குஜராத் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஸ்நேஹ் ராணா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சப்பினேனி மேகனா, சோபியா டங்க்லி இருவரும் குஜராத் இன்னிங்சை தொடங்கினர். மேகனா 8 ரன்னில் வெளியேற, அடுத்து சோபியாவுடன் ஹர்லீன் தியோல் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஆர்சிபி பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 30 பந்தில் 60 ரன் சேர்த்து அசத்தியது.

சோபியா 65 ரன் (28 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), கார்ட்னர் 19, ஹேமலதா 16, சதர்லேண்ட் 14 ரன் எடுத்து வெளியேற, ஸ்நேஹ் ராணா 2 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஒரு முனையில் உறுதியுடன் விளையாடி அரை சதம் அடித்த ஹர்லீன் 67 ரன் (45 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷ்ரேயங்கா பாட்டீல் பந்துவீச்சில் கிளீன்போல்டாக, குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. கிம் கார்த் 3, சுஷ்மா வர்மா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஹீதர், ஷ்ரேயங்கா தலா 2, ரேணுகா, மேகான் ஷுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது.

Related Stories: