காங். பலவீனமாக உள்ளது; இந்தியா அல்ல நாட்டை காட்டி கொடுக்காதீர்கள் ராகுல்: அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கு

புதுடெல்லி: நாட்டில் ஜனநாயகம் ஒழிந்துவிட்டதாக கூறியதற்கு பதிலடியாக, ``நாட்டை காட்டி கொடுக்காதீர்கள் ராகுல்,’’ என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக தாக்கியுள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `இந்தியாவில் ஜனநாயகம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பிற ஜனநாயக நாடுகள் இதனை கவனிக்க தவறியது வருந்தத்தக்கது,’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:

ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைப்பதற்கு, இந்தியாவை வெளிநாட்டில் காட்டி கொடுத்து வருகிறார். இதற்கு முன்பும் கூட, உள்நாட்டு பிரச்னையை காங்கிரஸ் கட்சி ஐநா வரை கொண்டு சென்றது. இப்போது, மற்ற நாடுகள் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று ராகுல் கூறியுள்ளார். அடிமைத் தனத்தில் இருந்து காங்கிரஸ் இன்னும் மீளவில்லை.

ராகுல் காந்தி சர்ச்சையின் ஒட்டு மொத்த உருவமாக மாறி வருகிறார்.

வெளிநாட்டு அமைப்பு, வெளிநாட்டு சேனல்கள் அல்லது வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்த கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் அவர் விட்டது கிடையாது.  நாட்டில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. ஆனால் இந்தியா பலவீனமாக இல்லை. எதற்காக அமெரிக்கா இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டும்?  இவ்வாறு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

Related Stories: