கொச்சி பிரம்மபுரம் குப்பைக் கிடங்கில் 5வது நாளாக பற்றி எரியும் தீ: 20 கி.மீ. தொலைவுக்கு புகை மூட்டம் பரவியதால் மக்கள் அவதி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி பிரம்மபுரம் குப்பைக் கிடங்கில் 5வது நாளாக பற்றி எரியும் தீயால் கடும் புகை மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எர்ணாகுளம் பகுதியில் சேகரிக்கப்படக்கூடிய குப்பைகளை கொச்சி பிரம்மபுரம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேகரித்து வைத்துள்ளனர். இந்த குப்பை கிடங்கில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காற்றின் வேகமும், வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தீ மளமளவென எரிந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 நாட்களாக பல்வேறு நடவடிக்கை எடுத்தபோதிலும் தற்போது வரை தீயை கட்டுப்படுத்த இயலவில்லை. தீயின் காரணமாக சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு புகை மூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தீயை எவ்வகையிலாவது கட்டுக்குள் கொண்டுவந்து தீயை முழுமையாக அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

Related Stories: