ரூ.30 லட்சம் கோடி பங்குச் சந்தை மோசடி மோடி, அமித்ஷாவுக்கு நேரடி தொடர்பு: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பங்குச்சந்தையில் ரூ.30 லட்சம் இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தல் நடந்த சமயத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மே 13 அன்று பேசும்போது,’ஜூன் 4ம் தேதிக்கு முன் பங்குகளை வாங்குங்கள்’ என்றார். மே 19ம் தேதி பேசிய பிரதமர் மோடி,’ஜூன் 4ம் தேதி பங்குச் சந்தைகள் சாதனைகளை முறியடிக்கும்’என்றார். ஜூன் 1 அன்று கடைசி கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதை தொடர்ந்து ஜூன் 3 அன்று, பங்குச் சந்தை மிகப்பெரிய சாதனைகளை முறியடித்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம் தேதி பங்குச் சந்தை சரிந்து முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: இந்தியாவின் சாமானிய மக்கள் ஜூன் 4 அன்று பங்குச் சந்தையில் ரூ. 30 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த பங்குச் சந்தை ஊழலை பாஜவின் உயர்மட்டதலைவர்கள் நடத்தினர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் ஷாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர். எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்? மக்களுக்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அவர்களின் வேலையா?\\”. அவர்கள் அளித்த இரண்டு நேர்காணல்களும் ஒரே வணிகக் குழுவிற்குச் சொந்தமான ஒரே ஊடக நிறுவனத்திற்கு ஏன் கொடுக்கப்பட்டது ஏன்? அந்த நிறுவனம் பங்குச் சந்தைகளைக் கையாள்வது தொடர்பான செபி விசாரணையின் கீழ் உள்ளது தெரியுமா?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ஐந்து கோடி குடும்பங்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வைத்து பெரும் லாபம் ஈட்டிய, போலியான கருத்துக்கணிப்பாளர்களுக்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு?. தேர்தலின் போது, ​​பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் சீதாராமன் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததை நாங்கள் முதன்முறையாகக் குறிப்பிட்டோம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் மக்களுக்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்கினர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறானவை என்று பாஜ தலைவர்களுக்கு தகவல் வந்திருந்தது. ஆனால் இந்த பிரச்னை அதானி பிரச்சினையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் விரிவானது. இதில் நேரடியாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் தான் ஈடுபட்டனர். பங்குச் சந்தை குறித்து பிரதமர் கருத்து தெரிவித்தது இதற்கு முன்பு நடந்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ஆதாரமற்ற குற்றச்சாட்டு: பா.ஜ
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழலில் நேரடியாக ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தும் சதித்திட்டம் தீட்டுகிறார். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் ராகுல் காந்தி இப்படி குற்றம் சாட்டுகிறார். அதே சமயம் ​​பிரதமர் மோடி இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற பாடுபடுகிறார்’ என்றார்.

The post ரூ.30 லட்சம் கோடி பங்குச் சந்தை மோசடி மோடி, அமித்ஷாவுக்கு நேரடி தொடர்பு: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: