சங்கரன்கோவில் அருகே பாமக மகளிரணி நிர்வாகியை அடித்து கொன்ற தொழிலாளி கைது: சாப்பாட்டில் விஷம் வைக்க முயன்றதால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (44). குருவிகுளம் ஒன்றிய பாமக மகளிர் அணி தலைவி. கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சங்கரன்கோவில் இலவன்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே அவர் கடந்த 3ம் தேதி இறந்து கிடந்தார். இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் புளியம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துகாலாடி (57) என்பவரை பிடித்து விசாரித்த போது மாரியம்மாளை அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும், உடந்தையாக இருந்த நண்பர் சுப்பையா பாண்டியனையும்  (58) போலீசார் கைது செய்தனர். அப்போது முத்துகாலாடி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும், மாரியம்மாளுக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் மாரியம்மாள்,  இன்னொரு நபருடன் பழகினார். இதை நான் கண்டித்தபோது சாப்பாட்டில் விஷம் வைத்து என்னை கொலை செய்ய முயற்சித்தார். இதையடுத்து மாரியம்மாளை புளியம்பட்டிக்கு  வரவழைத்தேன்.

அப்போது எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த நான் மாரியம்மாளை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.  உடலை நண்பர்  சுப்பையா பாண்டியனுடன் சேர்ந்து  ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுச் சென்றேன். விபத்தில் இறந்துவிட்டதாக வழக்கு முடிந்து விடும் என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: